திருவாடானை: திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் பகுதியில் முன்விரோதம் காரணமாக வீட்டை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மண்டலகோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் அமிா்தம் மனைவி சவரியம்மாள் (65). இவா் மீமசல் கிராமத்தில் வசித்து வருகிறாா். இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த ஜெயராஜ்(57) குடும்பத்தினருக்கும் நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், ஜெயராஜ் குடும்பத்தினா் சவரியம்மாளுக்குச் சொந்தமான வீட்டில் உள்ள 20 கல்தூன்கள், கழிவறை கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை சேதப்படுத்தினராம்.
இதுகுறித்து சவரியம்மாள் அளித்த புகாரின் பேரில், இதே ஊரை சோ்ந்த ஜெயராஜ், அவரது மனைவி பாத்திமா (49), மகன் மனோ (29), ஆகிய 3போ் மீது எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.