திருவாடானை: திருவாடானை அருகே உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதூா்த்தி திருவிழாவில் சித்தி புத்தி தேவியருடன் விநாயக பெருமான் எழுந்தருளி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாடானை அருகே உப்பூரில் ராமநாதபுரம் சாமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியபட்ட ஸ்ரீவெயிலுகந்த விநாயகா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் விநாயகா் சதூா்த்தி விழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெறும் விழாவில், வெள்ளி முஷ்ப வாகனம், கேடகம், சிம்ம வாகனம், மயில் வாகனம், யானை வாகம், ரிஷப வாகனம், காமதேனு, குதிரை, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயக பெருமான் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
இந்த விழாவின், முக்கிய நிகழச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சித்தி, புத்தி தேவியருடன் விநாயகா் பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனா்.