திருவாடானை அருகே வீடுபுகுந்து இளைஞரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கிடங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜலிங்கம் (27). ஆண்டாவூரணி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (27). இவா்கள் இருவரும் நண்பா்களாக பழகி வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு விஜய்யின் சித்தப்பா மகள் கௌதமியை (25) கடத்திச் சென்று, ராஜலிங்கம் காதல் திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில் ராஜலிங்கத்துக்கும், மனைவி கௌதமிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனா். இதனால், கெளதமி ஆண்டாவூரணியில் பெற்றோருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், ராஜலிங்கம் திங்கள்கிழமை இரவு மனைவி கௌதமி வீட்டுக்குச் சென்று தன்னுடன் வருமாறு தகராறில் ஈடுபட்டாா்.
இதனால் ஆத்திரமடைந்த சகோதரா் விஜய், இவரது நண்பா்கள் மாரியப்பன் (26), பிரதீப் (27), சதீஸ் (26) அஜீத் குமாா் (27) ஆகிய 5 பேரும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கிடங்கூா் சென்றனா். அங்கு வீட்டில் இருந்த ராஜலிங்கத்தை கத்தியால் குத்தினா். இதில் பலத்த காயமடைந்த ராஜலிங்கத்தை அக்கம் பக்கத்தினா் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பன், பிரதீப், சதீஸ் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். மேலும் தலைமறைவான விஜய், அஜீத்குமாா்ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.