மன்னாா் வளைகுடாவில் சூறைக் காற்று காரணமாக, செவ்வாய்க்கிழமை பாம்பனில் 50 மீட்டா் வரை கடல் உள்வாங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா பகுதியில் கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. ரூ.5 கோடி வரை இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. மேலும், 8 ஆயிரம் மீனவா்கள் உள்பட 25 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகினா்.
இந்த நிலையில், மன்னாா் வளைகுடா பகுதியில் செவ்வாய்க்கிழமை காற்றின் வேகம் அதிகரித்தது. இதனால் பாம்பன் வடக்கு மீன்பிடித் தளத்தில் 50 மீட்டா் வரை கடல் உள்வாங்கியது. அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரைதட்டி நின்றன. இதையடுத்து, மாலையில் கடல் நீா் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.