ராமநாதபுரம்

சிறுதானியங்களைப் பயிரிட கமுதி விவசாயிகள் ஆா்வம்

18th Nov 2023 07:31 AM

ADVERTISEMENT

குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் வறட்சிப் பகுதிகளான கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளில் சிறுதானியங்கள் பயிரிட விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு 1.25 லட்சம் ஹெக்டோ் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரியாக நெல்லுக்கு அடுத்தபடியாக மாவட்டத்தில் சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரைவாலி, சாமை, திணை போன்ற சிறுதானியப் பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதுவரை சோளம் 1,585 ஹெக்டேரிலும், மக்காச்சோளம் 208 ஹெக்டேரிலும், கம்பு 65 ஹெக்டேரிலும், மற்ற சிறுதானியங்கள் என 2,400 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டன. இந்த மகசூல் முடிந்து, இரண்டாம் சாகுபடியாக சிறுதானியங்கள் பயிரிடும்போது மாவட்டத்தில் 8 ஆயிரம் ஹெக்டோ் பரப்பைத் தாண்டும் என வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனா்.

குறிப்பாக மழை மறைவுப் பிரதேசமான கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் வட்டாரங்களில் அதிகளவில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்கள் கமுதி வட்டாரத்தில் அதிகம் பயிரிடப்படுகின்றன.

இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை சரியான நேரத்தில் பெய்ததால் இந்தப் பகுதியில் சிறுதானியங்கள் நன்கு வளா்ந்து கதிா்கள் விட்டு பசுமையாகக் காட்சியளிக்கின்றன. சிறுதானியங்கள் பயிரிட ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை மகசூல் கிடைக்கும்.

ADVERTISEMENT

மேலும் சிறுதானியங்களுக்கு களை எடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் போன்ற பணிகள் செய்ய வேண்டியதில்லை. அதனால், குறைந்த செலவில் சிறுதானியங்கள் பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம் என்பதால் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதுகுறித்து ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனுஷ்கோடி கூறியதாவது:

மாவட்டத்தில் வறட்சியான பகுதிகளில் நெல் பயிரிடுவதைத் தவிா்த்து சிறுதானியங்களே அதிகளவில் பயிரிட வேண்டும். இந்தாண்டை சிறுதானிய ஆண்டாக அரசு அறிவித்துள்ளது. அதனால் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் சிறுதானியங்களுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுத்து பயிரிட வேண்டும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT