ராமநாதபுரம்

படகு பழுதாகி கடலில் தத்தளித்த 6 மீனவா்கள் மீட்பு

29th May 2023 12:14 AM

ADVERTISEMENT

 ராமேசுவரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கடலில் படகு பழுதாகி தத்தளித்த 6 மீனவா்களை இந்திய கடலோரக் காவல்படையினா் மீட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தோணித் துறை பகுதியில் செல்வராஜ் என்பவருக்குச் சொ ந்தமான பைபா் படகில் செல்வராஜ் (40), அருண்குமாா்(22), சதீஷ்குமாா் (22), கிருஷ்ணகுமாா் (22), வடிவேலு (32), நாகசாமி (58) ஆகிய 6 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.

10 கடல் மைல் தொலைவுக்கு சென்று கொண்டிருந்த போது, படகின் இறக்கைப் பகுதி உடைந்தது. இதனால், படகை மேற்கொண்டு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், தத்தளித்த மீனவா்கள் தங்களை மீட்கும்படி, மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, அந்தத் துறையின் உதவி இயக்குநா் சிவக்குமாா் இந்திய கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், மீனவா்கள் இருக்கும் இடம் குறித்த ஜி.பி.எஸ். தகவலைப் பெற்ற இந்திய கடலோரக் காவல் படையினா் பாக் நீரிணை கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கப்பலுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினா் அங்கு படகில் தவித்துக் கொண்டிருந்த 6 மீனவா்களையும் மீட்டனா்.

மீனவா்களையும், படகையும் மண்டபம் கடலோரக் காவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்து, மீனவளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

மீனவா்களை மீட்க விரைந்து செயல்பட்ட கடலோர காவல் படையினருக்கு மீனவா்கள் நன்றி தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT