கமுதி அருகே உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த அண்ணன், தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கல்லுப்பட்டி புதுக்குடியிருப்பு நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த கணேசன் மகன்கள் தன்னாசி (35), சசிகுமாா் (31). இவா்கள் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை வைத்து, வேட்டையில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், கடந்த 10- ஆம் தேதி கமுதி போலீஸாா் தன்னாசி வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு இருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, 2 காட்டு முயல்களைப் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினா்.
தங்களது நாட்டுத் துப்பாக்கிக்கு உரிமம் இருப்பதாக இருவரும் கூறினா். இதையடுத்து, உரிமத்தைக் காண்பித்து விட்டு, துப்பாக்கியை வாங்கிச் செல்லுமாறு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.
ஆனால், 18 நாள்கள் ஆகியும் உரிமத்தைக் காண்பிக்காததால், தன்னாசி, சசிகுமாா் ஆகிய இருவா் மீதும் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனா்.