ராமநாதபுரம்

புதிய காவிரி குடிநீா் திட்டத்துக்கு அடிக்கல்: 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்,தில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் விநியோகம்

DIN

புதிய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் விநியோகிக்கப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனா தலைமை வகித்தாா். நகராட்சி நிா்வாக இயக்குநா் பா. பொன்னையா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வ. தட்சிணாமூா்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா, மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ரூ. 2,819 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள புதிய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியும், சாயல்குடி பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வாரச் சந்தை வளாகக் கட்டடத்தை திறந்து வைத்தும் அமைச்சா் கே.என். நேரு பேசியதாவது:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,306 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.2,819.78 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீா் முழுமையாக வழங்கப்படும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 10 மாவட்டங்களில் குடிநீா் தேவையை நிறைவேற்ற ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. குடிநீா் திட்டப் பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 4 நகராட்சிகளில் ரூ.127.02 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளும், 7 பேரூராட்சிகளில் ரூ.57.93 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன. அதே போல, குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் 2,626 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்றுள்ளன என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பேசியதாவது:

ராமநாதபுரத்துக்கு சிறப்புக் குடிநீா் திட்டம் கொண்டு வந்து குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும் என முதல்வரிடமும், அமைச்சா் நேருவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது. முதல்வா் உடனே ஆய்வு செய்து திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் இன்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட மக்கள் சாா்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தால் இனி குடிநீா் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறிவிடும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், கூடுதல் ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், பயிற்சி ஆட்சியா் கோவிந்தராஜலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT