ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் சட்ட விரோத மதுப் புட்டிகள் விற்பனையைத் தடுக்க வலியுறுத்தல்

19th May 2023 02:27 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையில் சட்ட விரோதமாக பல்வேறு இடங்களில் மதுப் புட்டிகள் விற்கப்படுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 11 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ராமேசுவரம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் முழுமையாக அகற்றப்பட்டன. தற்போது பாம்பன் பகுதியில் மட்டும் 3 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன.

இதனிடையே ராமேசுவரத்தில் மீண்டும் டாஸ்மாக் கடையைத் திறக்க பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து

பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியதோடு, நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால், ராமேசுவரத்தில் தற்போது வரை டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை.

ADVERTISEMENT

இதை சாதகமாகப் பயன்டுத்தி 300-க்கும் மேற்பட்டோா், ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனா். மேலும் கைப்பேசியில் அழைக்கும் வாடிக்கையாளா்களுக்கு வீடு தேடிச் சென்று மதுப் புட்டிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனா். இதுபோன்ற மது விற்பனையைத் தடுக்க வேண்டும் என மாதா் சங்கத்தினா் தொடா்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக, போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து 90 சதவீத மதுப்புட்டிகள் விற்பனையை தடுத்ததுடன், பல ஆயிரம் மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா். அத்துடன் 200-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கும் தொடரப்பட்டது. இதனால் சட்ட விரோத மது விற்பனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், ராமேசுவரத்தில் பணியில் இருந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்செயன்

மாற்றப்பட்ட பிறகு, மீண்டும் மது விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் மதுப் புட்டிகள் கொண்டு வரப்பட்டு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இதில், மாவட்டக் காவல் துறை தனிக் கவனம் செலுத்தி சட்ட விரோத மது விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பக்தா்களும் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT