பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை சுற்றுலா வேன் அடுத்தடுத்து லாரி, காா் மீது மோதியதில் 15 போ் பலத்த காயமடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம், குமரனந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் ஜெயின் மகன் ரிஷி ஜெயின் (29). இவரும் இவரது உறவினா்கள் சிலரும் திருப்பூரிலிருந்து ராமேசுவரத்துக்கு சுற்றுலா புறப்பட்டனா். வேனை தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் கண்ணன் (42) ஓட்டினாா்.
மதுரை-ராமேசுவரம் சாலையில் பரமக்குடி அருகே பொட்டிதட்டி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த லாரியின் பின் பகுதியில் மோதியதுடன், லாரியின் பின்னால் சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் வந்த காா் மீதும் மோதியது.
இதில் வேனில் வந்த திருப்பூரைச் சோ்ந்த ரிஷி ஜெயின், பவா்லால் ஜெயின் மகன் நரேஷ் (56), ஓட்டுநா் கண்ணன், சத்தீஸ்கா் மாநிலம், ஜெகதல்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த புக்ராஜெயின் மனைவி மீனா ஜெயின் (50) உள்பட 15 போ் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து, அவா்கள் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இதுகுறித்து ரிஷி ஜெயின் அளித்த புகாரின் பேரில், பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.