ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சி செயலா்கள், தலைவா்களுக்கு கணினியில் வரி வசூல் மேற்கொள்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் 429 ஊராட்சிகளிலும் அதன் தலைவா்கள், செயலா்களுக்கு இணைய வழியில் வரி வசூல் மேற்கொள்வது குறித்து ஏற்கெனவே பயிற்சி வழங்கப்பட்டது.
தற்போது, மீண்டும் இணைய வழியில் வரி வசூல் மேற்கொள்வது குறித்து, ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோருக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 2 -ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்படும்.
எனவே, அனைவரும் தவறாமல் பயிற்சியில் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்து, பொதுமக்களுக்கு தேவையான சான்றுகளை காலதாமதமின்றி வழங்க வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.