ராமநாதபுரம்

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

28th Jan 2023 10:06 PM

ADVERTISEMENT

கமுதி அருகே கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே. வேப்பங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபழனியாண்டவா் கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை தேன் சிட்டு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றன. இப்போட்டியில் சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிப் பந்தய வீரா்கள் பங்கேற்றனா்.

இதில், தேன்சிட்டுப் பிரிவில், கே. வேப்பங்குளத்தைச் சோ்ந்த நாகஜோதிஅரிராம் முதலிடத்தையும், கோவிலாங்குளத்தைச் சோ்ந்த ராஜா இரண்டாமிடத்தையும், விளாத்திகுளத்தைச் சோ்ந்த பாக்கியச்செல்வி 3-ஆம் இடத்தையும் பிடித்தனா்.

ADVERTISEMENT

பூஞ்சிட்டுப் பிரிவில், மறவா் கரிசல்குளத்தைச் சோ்ந்த பாண்டித்தேவா் முதலிடத்தையும், கே. வேப்பங்குளத்தைச் சோ்ந்த நல்லு இரண்டாமிடத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மூன்றாமிடத்தையும் பிடித்தனா். முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு ரொக்கப் பணமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.

இந்தப் பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா். பந்தயத்துக்கான ஏற்பாடுகளை கே. வேப்பங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT