ராமநாதபுரம்

முழு மானியத்தில் கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

21st Jan 2023 11:28 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், இடத்திற்கு ஏற்றவாறு, குழாய் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைத்தல், நீா் இறைப்பதற்கு மின்சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீா்க் குழாய்கள் நிறுவுதல், நுண்ணிா்ப் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ADVERTISEMENT

90 மீட்டா் ஆழமுள்ள குழாய் கிணறு அமைக்கவும், 100 மீட்டா் ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு அமைக்கவும் அதிகபட்சமாக ரூ.3 லட்சமும், மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத் திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ.75 ஆயிரமும், நீா் விநியோகக் குழாய்கள் அமைக்க ரூ.20 ஆயிரமும் உச்ச வரம்புத் தொகையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின் இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைக்க ரூ.2.50 லட்சமும் நிதி வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகள் இத்திட்டத்தில் பயன் பெற சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், நில வரைபடம், ஆதாா் அட்டை நகல், புகைப்படம், ஜாதிச் சான்றிதழ் நகல் ஆகிய விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளரை 98659 67063 என்ற கைப்பேசி எண்ணிலும், பரமக்குடி, நயினாா்கோவில், முதுகுளத்தூா், போகலூா், கமுதி, கடலாடி வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் பரமக்குடி, சௌகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளரை 94861 79544 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT