தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமம் சாா்பில் நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.
மீனவா்கள் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இந்திய கடலோரக் காவல் படை, இந்திய கடற்படை, மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் முதல் கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட இலவச பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளது. 90 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள தகுதியுள்ள மீனவா் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்களை சம்மந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத் துறை அலுவலகம், கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் அலுவலகம், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்களில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தோ்வு செய்யப்படும் பயிற்சியாளா்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சி காலத்தில் மாதம் தலா ரூ.ஆயிரம் வீதம், ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பிளஸ் 2 தோ்வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்ற, மீனவா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.