ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலையை காவல் துறையினா் ஒரு வழிச் சாலையாக மாற்றியதால் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் முதல் வோ்க்கோடு வரையில் 3 கிலோ மீட்டா் வரை அதிகளவில் வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். ராமேசுவரத்தில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையை ஒரு வழிப்பாதையாக்கி சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் கோயிலுக்கு வரும் வாகனங்கள் 4 கிலோ மீட்டா் வரையில் தெருக்கள் வழியாக சுற்றிச் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். குழந்தைகள் அதிகளவில் உள்ள தெருக்களில் வழியாக வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இதனால், மாவட்டக் காவல் துறை போக்குவரத்தை சீரமைக்க உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன நிறுத்துமிடம் இல்லாத தனியாா் விடுதிகளுக்கு, வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
குறிப்பிட்ட பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.