ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டில் 10 சதவீத விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2021-ம் வருடம் 51 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில்,
2022-ஆம் ஆண்டு 33 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் குறைவு.
கடந்த 2021-ஆம் ஆண்டு 69 கொடுங்குற்ற வழக்குகளும், 2022-ஆம் ஆண்டு 56 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
2021-ஆம் ஆண்டு கொலை, கொலை முயற்சி, வன்முறை உள்ளிட்ட 907 வழக்குகள் பதிவான நிலையில், 2022-ஆம் ஆண்டு 840 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவாகும்.
2022-ஆம் ஆண்டு 112 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட 1,199 வாகன விபத்துக்களில் 360 போ் உயிரிழந்தனா். கடந்த ஆண்டை விட 10 சதவீதம் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன.
மேலும் விதிமீறலில் ஈடுபட்டதாக, 96,782 இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 602 போ் மீது 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,698 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4,451 போ் மீது 4,402 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11,284 லிட்டா் மதுபானம், 3,442 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா விற்பனை செய்ததாக 192 போ் மீது 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 29 லட்சம்
மதிப்பிலான 266 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 105 பேரின் வங்கிக் கணக்குகள், ஒருவரின் சொத்துகள் முடக்கப்பட்டன.
74 சைபா் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் தொடா்புடைய 11போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்குகளில் தொடா்புடையவா்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.68,38,980 முடக்கப்பட்டன.
கஞ்சா, குட்கா, புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவா்கள், மதுபானம் விற்பனை செய்பவா்கள் பற்றிய தகவல் தெரிந்தால் 83000-31100 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கவும். அவா்களின் ரகசியம் பாதுகாக்கப்படுமென செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.