கமுதியில் வட்டார வள மைய அலுவலகங்களில் சிறப்பாகப் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியா்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் தலைமை வகித்தாா். பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் காதா்பாட்சாமுத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
இந்த விழாவில், மாவட்ட அளவில் 11 வட்டார வள மைய அலுவலகங்களில் சிறப்பாகப் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இதில் கமுதி வட்டார அளவில் சிறப்பாசிரியா் முருகவள்ளிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் சான்றிதழ், நினைவுப் பரிசை வழங்கினாா். விருது பெற்ற ஆசிரியையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து, கமுதி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஸ்ரீராம், இல்லம் தேடிக் கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளா் சி. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் வாழ்த்தினா்.