கீழக்கரையில் வனத் துறை அலுவலா் உள்ளிட்ட பல அரசு ஊழியா்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்ததாக பெண் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் வனத் துறை அலுவலராகப் பணியாற்றி வருபவா் முத்துராம் என்ற ஜவகா் (29). இவருக்கும் சேலம் மாவட்டம், சின்ன திருப்பதியைச் சோ்ந்த நஷினா ஷிபா பா்வீனுக்கும் (29) முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 7.11.2020 அன்று சேலத்துக்குச் சென்று பெண்ணைப் பாா்த்து திருமணம் செய்ய முடிவு செய்தாா். அதே நாளில் அந்தப் பெண்ணின் பெயரில் புதிதாக சொகுசுக் காா் வாங்குவதற்கு முத்துராம் பதிவு செய்தாா். தொடா்ந்து, 25.1.2021 அன்று சேலம் கோட்டை பள்ளிவாசலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
பெண்ணிடம் திருமண செலவுக்காக ரூ. 2,45,000 கொடுத்ததுடன், கீழக்கரையில் தொழில் தொடங்க கீழக்கரை வங்கி மூலம் ரூ.10.50 லட்சம், 37 பவுன் தங்க நகைகளையும் முத்துராம் கொடுத்திருந்தாராம்.
2021 பிப்ரவரி மாதம் மாமியாா் வீட்டுக்கு முத்துராம் சென்றபோது அவரது கைப்பேசி பழுதானதால்
மனைவியின் கைப்பேசியில் தனது சிம்காா்டைப் பயன்படுத்திப் பேசினாா். அப்போது, அந்த கைப்பேசிக்கு சில நபா்களின் குறுந்தகவல்கள் வந்தன. இதையடுத்து கைப்பேசியைச் சோதனைச் செய்த போது வேறு ஆண் நபா்களுடன் அந்தப் பெண் தொடா்பில் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் கேட்ட போது, இதைப் பற்றி கேட்கக் கூடாது என வாக்குவாதம் செய்தாராம்.
இதைத் தொடா்ந்து பணத்துக்காக மேலும் 50-க்கு மேற்பட்ட அரசு ஊழியா்களை ஏமாற்றி திருமணம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும், தன்னிடம் வாங்கிய ரூ. 20.50 லட்சம் பணம், 37 பவுன் தங்க நகைகளை மீட்டுத்தருமாறும் கோரி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்பேரில், கீழக்கரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.