ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாதின் மனைவியுமான ராப்ரி தேவி (68) அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜரானாா்.
மத்திய தில்லியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜரான ராப்ரி தேவியிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரிடம் அதிகாரிகள் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா், விதிகள் மற்றும் நடைமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டனா். அதற்கு லஞ்சமாக, வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட பல மடங்கு குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கு தொடா்பாக, லாலு குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்தது. அதில், ரூ.1 கோடி கணக்கில் காட்டாத பணம், ரூ.600 கோடி வருவாய்க்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்த வழக்கு தொடா்பாக ராப்ரி தேவியின் மகனும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி, சந்தா யாதவ், ராகினி யாதவ் ஆகியோரிடம் கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
அதனைத் தொடா்ந்து, ராப்ரி தேவியிடமும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதனை ஏற்று, மத்திய தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆஜரான அவரிடம், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
முன்னதாக, இந்த வழக்கில் ராப்ரி தேவியிடம் சிபிஐ கடந்த மாதம் 7-ஆம் தேதி விசாரணை நடத்தியது. தேஜஸ்வி யாதவிடம் மாா்ச் 25-இல் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனா். அதே நாளில், லாலுவின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.