இந்தியா

டீ கடை மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டும் இளைஞர்கள்!

18th May 2023 04:25 PM

ADVERTISEMENT

 

டீ கடை மூலம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டி பலரின் கவனத்தை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் 

இந்தியாவில் அதிக மக்களால் விரும்பி பருகப்படும் பானம் என்றால் அது தேநீர்தான். அதேபோன்று டீ கடைகள் வெறும் தேநீர் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சிற்றுண்டி, மாலை நொறுக்குத்தீனி போன்றவற்றையும் விற்பனை செய்கின்றன. 

மத்தியப் பிரதேசமாநில இந்தூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் நாயக் மற்றும் அவரின் நீண்டகால நண்பரான அனுபவ் தூபே ஆகிய இருவர் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தனர்.

ADVERTISEMENT

இதில் ஆனந்த் நாயக் என்பவர் ஏற்கெனவே சொந்தமாக சிறிய தொழிலைத் தொடங்கி நஷ்டத்தையே சந்தித்து வந்துள்ளார். அவர் தனது நண்பனான ஐஏஎஸ் பயின்று வரும் அனுபவ் தூபேவிடன் உதவி கேட்டுள்ளார். 

நண்பனுக்கு உதவுவதற்காக தில்லியில் ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி செய்வதை பாதியில் நிறுத்திவிட்டு இந்தூர் வந்துள்ளார். இருவரும் தங்களிடமிருந்த 3 லட்சத்தை வைத்து சாய் சுட்டா பார் (Chai Sutta Bar) என்ற டீ கடையை வைத்துள்ளனர். 

பெண்கள் விடுதி அருகே வைக்கப்பட்ட இந்த கடை குறுகிய இடைவெளியில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பெண்கள் விடுதியில் இருந்த மேஜைகளையே இவர்கள் டீ கடைக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்தக் கடையில் கண்ணாடி கோப்பைகளுக்கு பதிலாக மண் குடுவையில் மட்டுமே தேநீர் வகைகள் வழங்கப்படுகிறது.

அதில் கிடைத்த லாபத்தில் மட்டுமே அடுத்தடுத்த கிளைகளைத் தொடங்கியுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது நாடு முழுவதும் 195 நகரங்களில் 400க்கும் அதிகமான கிளைக்கொண்டுள்ளது.

உலகிலேயே அதிக கிளைகளையுடைய டீ கடை நிறுவனம் என்ற பெருமையையும் இந்த இளைஞர்களின் நிறுவனம் பெற்றுள்ளது. இளைஞர்கள் தாங்கள் தொடங்கிய டீ கடை மூலம் தற்போது ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டி வருகின்றனர். 

பொருளீட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொள்ளாமல், சமூகம் சார்ந்த அக்கறையுடனும் அவர்கள் இயங்குகின்றனர். தாங்கள் தொடங்கும் புதிய கிளைகளுக்கு ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். மேலும், பெண்களுக்காக பெண்கள் மட்டுமே பணிபுரியும் வகையில் சில கிளைகளையும் தொடங்கியுள்ளனர். 

டீ கடைகளில் சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது வழக்கம். ஆனால், தங்களுடைய டீ கடையில் போதைப்பொருள்களை இந்த இளைஞர்கள் விற்பனை செய்வதில்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT