ராமநாதபுரம்

‘இயற்கைத் துறைமுகங்களை உருவாக்கும் உப்பங்கழிகள்’

DIN

உப்பங்கழிகள் இயற்கைத் துறைமுகங்கங்களை உருவாக்கி வருவதாக தொல்லியல் துறை ஆய்வாளா் ராஜகுரு தெரிவித்தாா்.

ராமநாதபுரம் கலை இலக்கிய ஆா்வலா்கள் சங்கம், மாவட்ட நிா்வாகம் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகிற 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 5-ஆவது புத்தகத் திருவிழா நடத்தவுள்ளது.

இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டப் பாரம்பரியம், வரலாறு, சுற்றுலா சிறப்புமிக்க இடங்கள் பற்றிய விழிப்புணா்வை கல்லூரி மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்தும்விதமாக தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, காரங்காடு ஆகிய இடங்களுக்கு மாணவா்களை அழைத்துச் செல்லும் மரபு நடை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

உதவி ஆட்சியா் (பயிற்சி) நாராயணசா்மா மரபு நடை நிகழ்வைத் தொடக்கி வைத்தாா். இந்த நடைபயணத்துக்கு தலைமை வகித்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளா் வே.ராஜகுரு காரங்காட்டில் மாணவா்களிடம் பேசியதாவது:

கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஓடை, ஆறுகள் கடலில் கலக்கும் கழிமுகப்பகுதி உப்பங்கழிகளால் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. பண்டைய காலத்தில் கப்பல்களிலிருந்து சரக்குகளை படகுகளில் ஏற்றி வந்து கரையில் இறக்குவதற்கு உப்பங்கழிகள் உதவியாக இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் வா்ணிக்கும் கடற்கரைச்சோலை, துறைமுகத்தின் சூழலை அறிந்துகொள்ள காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி உதவுகிறது. இவை ஆங்கிலேயா் காலம் வரை துறைமுகமாக இருந்தன.

தேவிபட்டினம், திருப்பாலைக்குடி செவ்விருக்கை நாட்டுப் பகுதியில் இருந்தன. இங்குள்ள இரு கோயில்களிலும் கருங்கற்கள், மணற்பாறைகளைக் கொண்டும், மேல்பகுதி செங்கல்கள் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கோயில்கள் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் சோழா் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். தேவிபட்டினம் முதலாம் ராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமாதேவியின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலா் வெங்கடாசலபதி, கல்லூரிப் பேராசிரியா்கள் இளவரசன், பொ்லின் ஆகியோா் செய்திருந்தனா். இதில் ராமநாதபுரம் சேதுபதி அரசுக் கல்லூரி, கீழக்கரை தாசிம்பீவி மகளிா் கல்லூரி மாணவ, மாணவிகள் 50 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT