தினமணி செய்தி எதிரொலியால், கமுதி அருகே சூறைக் காற்றுடன் பெய்த மழையில் முறிந்து, சேதமடைந்த வாழைகள் குறித்து திங்கள்கிழமை வருவாய்த் துறையினா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கிளாமரம், கூலிபட்டி, நீராவிகரிசல்குளம், கோரைப்பள்ளம், காவடிபட்டி, ராமசாமிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களுக்கு முன் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து, சேதமடைந்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
இது தொடா்பாக தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து, கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், மேலராமநதி கிராம நிா்வாக அலுவலா் ராதிகா உள்ளிட்டோா் சேதமடைந்த வாழைகளை நேரில் ஆய்வு செய்தனா்.
அப்போது, கோரைப்பள்ளத்தைச் சோ்ந்த 8 விவசாயிகளின் 2,080 வாழைகள் சேதமடைந்ததாகவும், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க மாவட்ட ஆட்சியா், பரமக்குடி கோட்டாட்சியா் ஆகியோருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன் தெரிவித்தாா்.