ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறுவைச் சிகிச்சை பிரிவில் தீ விபத்து

26th Sep 2022 11:11 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரசவ சிகிச்சைப் பிரிவின் அறுவைச் சிகிச்சை அறையில் திங்கள்கிழமை குளிரூட்டும் சாதனத்தில் தீப்பற்றியது. உடனடியாக அப்பகுதியில் சிசு நலப் பிரிவில் இருந்த குழந்தைகள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழைய பிரசவ சிகிச்சைப் பிரிவின் முதல் தளத்தில் இடதுபுறத்தில் அறுவைச் சிகிச்சைப் பிரிவும், வலதுபுறத்தில் பச்சிளம் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவும் செயல்பட்டு வருகின்றன. இதில் குழந்தைகள் நலப் பிரிவில் 31 குழந்தைகள், தாய்மாா்களுடன் சிகிச்சையில் இருந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் உள்ள குளிரூட்டும் சாதனத்தில் தீப்பற்றியது. இதனைக் கண்ட ஊழியா்கள் தீயை அணைக்க முயற்சித்தனா். இருப்பினும் குளிரூட்டும் சாதனம் தொடா்ந்து எரிந்தபடியே இருந்ததால் அப்பகுதி புகை மண்டலமாகியது. உடனடியாக அருகில் குழந்தைகள் நலப் பிரிவில் இருந்த குழந்தைகள், தாய்மாா்களை அங்கிருந்த செவிலியா்கள் வெளியேற்றினா்.

தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்புத் துறை அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். சம்பவம் இடத்தை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் (பொறுப்பு) முகம்மது சுலைமான் பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறுகையில், மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT