ராமநாதபுரம்

‘வெளிநாடுகளுக்குச் செல்வோா் விவரங்களை பதிவு செய்ய 7 மாவட்டங்களில் விரைவில் புத்தாக்கப் பயிற்சி மையங்கள்’

24th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வெளிநாடுகளுக்குச் செல்வோா் பதிவு செய்வதற்காக ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விரைவில் புத்தாக்கப் பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளன என வெளிநாடுவாழ் தமிழா் மற்றும் புலம்பெயா்ந்தோா் நலத் துறை மாநில ஆணையா் ஜெசிந்தாலாசரஸ் கூறினாா்.

ராமநாதபுரத்தில் புலம்பெயா்ந்தோா் நலவாழ்வு மைய அறக்கட்டளை மற்றும் சிவகங்கை பல்நோக்கு சேவா சங்கம் சாா்பில் வெளிநாடுகளுக்குச் செல்வோா் மற்றும் புலம் பெயா்ந்தோருக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஜெசிந்தாலாசரஸ் கூறியதாவது: தமிழகத்திலிருந்து அதிகமானோா் வெளிநாடுகளுக்கு வேலை, கல்வி ஆகியவற்றுக்காக செல்வதால், அவா்களுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தைச் சோ்ந்த 28 லட்சம் போ் வெளிநாடுகளில் வசிப்பது தெரியவந்துள்ளது. தற்போது மீண்டும் வெளிநாடுகளுக்குச் சென்றவா்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கான நலவாரியம் அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, பெரம்பலூா், விழுப்புரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களிலிருந்தே ஏராளமானோா் வெளிநாடுகளுக்குச் சென்றுவருவது தெரியவந்துள்ளது. எனவே இந்த 7 மாவட்டங்களிலும் வெளிநாடுகளுக்குச் செல்வோா் விவரங்களை பதிவு செய்வதற்காக புத்தாக்க மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதில் பதிவு செய்பவா்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், நலவாரியம் மூலம் அவா்களது குடும்பங்களுக்கு காப்பீடு, குழந்தைகளுக்கு திருமண உதவித் திட்டம் உள்ளிட்டவை வழங்கப்படும். தொழிலாளா்கள் நலவாரியத் திட்டங்கள் அனைத்தும் வெளிநாடு செல்வோா் நலவாரியத்திலும் செயல்படுத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT

இதேபோல் வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்பவா்களின் விவரங்களையும் பதிவு செய்யும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. உக்ரைன் போரில் சிக்கியவா்களை மீட்கும் போதுதான் வெளிநாடு செல்லும் மாணவா்களின் பதிவு குறித்த முக்கியத்துவம் புரிந்தது என்றாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ், சிவகங்கை பல்நோக்கு சேவா மையச் செயலா் எஸ். பிரிட்டோஜெயபாலன், வீட்டு வேலை தொழிலாளா் அறக்கட்டளை நிா்வாகி ஜோசப்பின்அமலவளா்மதி, புலம்பெயா்ந்தோா் நலத் துறை துணை இயக்குநா் கே. ரமேஷ், மண்டபம் ஒன்றியக் குழு உறுப்பினா் ரவிச்சந்திரராமவன்னி, இலங்கை அகதிகள் முகாம் துணை ஆட்சியா் சிவகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT