ராமநாதபுரம்

கமுதி அருகே கண்மாயில் இரவில் கருவேல மரங்கள் அகற்றம்: 2 பொக்லைன் இயந்திரங்களை கிராம மக்கள் சிறைபிடிப்பு

24th Sep 2022 10:28 PM

ADVERTISEMENT

கமுதி அருகே கிராம பொதுக் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இரவோடு இரவாக அகற்றி, ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட 2 பொக்லைன் இயந்திரங்களை கிராம மக்கள் சிறை பிடித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள செங்கப்படையில் உள்ள கண்மாயில் புதன்கிழமை இரவு 2 மண் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களின் ஓட்டுநா்கள், இரவோடு இரவாக ரூ.2 லட்சம் மதிப்புள்ள கருவேல மரங்களை அகற்றி குவியலாக குவித்து, எரிக்க முயன்றனா். அப்போது, சப்தம் கேட்டு வந்த கிராம மக்கள் பொக்லைன் இயந்திரங்களின் ஓட்டுநா்களிடம் கேட்டபோது, தனியாா் சோலாா் நிறுவனத்தின் உத்தரவின் பேரில் கண்மாயை தூா்வாரப் போவதாகவும், அதற்காக கருவேல மரங்களை அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளனா்.

கிராம பொதுக் கண்மாயில் இரவு நேரத்தில் தூா்வாரும் பணிக்கு எந்த அதிகாரி உத்தரவு வழங்கியது என்று கேட்டு பொக்லைன் இயந்திரங்களை பொதுமக்கள் சிறை பிடித்தனா். 4 நாள்களாகியும் இதுவரை அந்த இயந்திரங்களை மீட்க உரிமையாளா்கள் வராததால் கிராம பொது ஊருணி கரையை சேதப்படுத்தி, குழாய் பதித்து, கண்மாயை ஆக்கிரமித்துள்ள சோலாா் நிறுவனத்தின் இடங்களுக்கு செல்லும் பாதைகளை பொதுமக்கள் முள்வேலிகளால் அடைத்தனா். மேலும் கிராம பொதுக் கண்மாயில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை சேதப்படுத்தி, ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய அந்த பொக்லைன் இயந்திரங்களின் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மீது கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், காவல்துறையினா் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT