ராமநாதபுரம்

அரசுப் பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம்

24th Sep 2022 10:28 PM

ADVERTISEMENT

கமுதி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 70- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளி வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் கீழ்ப்பகுதியில் தூண்கள் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து, இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். மேலும் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி பள்ளி வேலை நாள்களின் போது இடிந்து விழுந்தால் இதில் பள்ளி குழந்தைகள் சிக்கி பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சேதமடைந்த இந்த மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை உடனடியாக அகற்றி, மாற்று இடத்தில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து புதுக்கோட்டை ஊராட்சித் தலைவா் க. வீரபாண்டியிடம் கேட்டபோது, அவா் கூறியது: இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம், ஊராட்சி சாா்பில் பலமுறை புகாா் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஊராட்சியில் நிதி இல்லாததால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இயலவில்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT