ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவா் மா்மச்சாவு

9th Sep 2022 10:54 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தண்டவாளத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் 6 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கூரியூரைச் சோ்ந்தவா் உசேன் மகன் செய்யதுகான் (21). ராமநாதபுரம்- தேவிபட்டினம் சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை கணினிப் பிரிவில் மூன்றாமாண்டு படித்து வந்த இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பகுதி நேரமாகவும் வேலை பாா்த்துவந்தாா்.

செய்யதுகான் வியாழக்கிழமை இரவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைபாா்த்த நிலையில், தேவேந்திர நகா் பகுதியில் உள்ள தனியாா் திருமணமண்டபத்தின் பின்னால் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை காலை இறந்து கிடந்தாா். அதையறிந்த பஜாா் மற்றும் ராமநாதபுரம் நகா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உடல் கூறாய்வில் அவரது தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருந்தது. இதையடுத்து போலீஸாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்கு உள்படுத்தினா். இதில் வியாழக்கிழமை இரவு செய்யதுகானுக்கும், அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் கூரியூா், பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த 6 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT