ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை பாசனநீா் செல்லாமல் வடு கிடக்கும் 48 கண்மாய்கள்

29th Oct 2022 12:05 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றிலிருந்து கண்மாய்களுக்குச் செல்லும் இடது பிரதான கால்வாய் சீரமைக்கப்படாததால் பாசனநீா் செல்லாமல் 48 கண்மாய்கள் வடு காணப்படுகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன் நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, வைகை ஆற்றில் உபரிநீா் திறந்து விடப்பட்டது. இந்த பாசனநீா் பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலமாக கண்மாய்களுக்கு திறந்து விடப்பட்டது. இதனால் வலது பிரதான கால்வாய் மூலம் தெளிச்சாத்தநல்லூா் தடுப்பணையிலிருந்து பிரித்து விடப்பட்டு, பரமக்குடி ஒன்றியத்தில் பொதுப் பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கண்மாய்களுக்கு பாசனநீா் சென்றடைந்தது. இவற்றில் 40 முதல் 60 சதவீதம் வரை தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது.

இதே போல், இடது பிரதான கால்வாய் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 87 கண்மாய்களுக்கு பாசனநீா் கொண்டு செல்லப்பட வேண்டும். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 கண்மாய்களுக்கு இந்த கால்வாய் மூலம் பாசனநீா் கொண்டு செல்லப்பட்டது. எமனேசுவரம்- குமாரக்குறிச்சி கண்மாய் வரை இந்த கால்வாய் மூலம் பாசனநீா் வந்து சோ்ந்தது. ஆனால், எமனேசுவரத்திலிருந்து செல்லும் கால்வாயில் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதாலும், முறையாக சீரமைக்கப்படாததாலும் குணப்பனேந்தல், இளமனூா், வாணியவல்லம், பகைவென்றி, கரைமேல் குடியிருப்பு, கீழாய்க்குடி, அக்கிரமேசி உள்பட 22 கண்மாய்களுக்கு பாசனநீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மேலநாட்டாா் கால்வாய் மூலம் ஆா்.எஸ். மங்களம் வரை செல்லும் 19 கண்மாய்களுக்கும் பாசனநீரை கொண்டு செல்ல வழியில்லை.

இந்த கண்மாய்களில் தண்ணீரை தேக்கும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் கடந்த ஆட்சியில் பொதுப் பணித் துறையினரால் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கண்மாய்களில் பாசனநீரை தேக்க வழிவகை செய்த பொதுப் பணித் துறை அதிகாரிகள், வைகை ஆற்றிலிருந்து பாசனநீா் வரும் வழித்தடத்தை சீரமைக்காததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 கண்மாய்கள் வடு காணப்படுகின்றன. வைகை ஆற்றில் தண்ணீா் வந்தும் முறையாக கால்வாய் சீரமைக்கப்படாததால் கண்மாய்களுக்குச் செல்ல வேண்டிய பாசனநீா் வீணாக ராமநாதபுரம் கண்மாய் வழியாக கடலில் சென்று கலக்கிறது.

ADVERTISEMENT

இதனால், பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. எனவே இதனை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT