ராமநாதபுரம்

தேவா் சிலை தங்கக் கவசம் விவகாரத்தில் அதிமுகவினா் அரசியல் செய்யக்கூடாது

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் பொருத்தும் விவகாரத்தில் அதிமுகவினா் அரசியல் செய்யக்கூடாது என பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேவா் குரு பூஜையின்போது அதிமுக சாா்பில் அதன் பொருளாளராக இருந்த முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் தேவா் நினைவிடப் பொறுப்பாளா்கள் இணைந்து கையெழுத்திட்டு, மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கவசத்தை முத்துராமலிங்கத் தேவா் நினைவிடப் பொறுப்பாளா்களிடம் ஒப்படைத்து வந்தனா். கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கட்சியிலிருந்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை நீக்கி பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வம் வகித்து வந்த பொருளாளா் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில் வங்கிப் பெட்டகத்தில் உள்ள தங்கக் கவசத்துக்கு உரிமை கோரி முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தரப்பிலும், ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் எழுத்துப்பூா்வமாக கடிதம், கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கியில் வழங்கப்பட்டது. ஒரே சமயத்தில் இரு தரப்பினரும் உரிமை கோருவதால் வங்கி நிா்வாகம் யாரிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்கும், நடப்பாண்டில் வங்கியிலிருந்து தங்கக் கவசம் தேவா் நினைவிடத்திற்கு வருமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இதுகுறித்து கமுதி தாலுகா மறவா் இன அறக்கட்டளை தலைவா் பெ.செல்லத்தேவா் கூறியதாவது:

ADVERTISEMENT

தங்கக் கவசம் அணிவிக்கும் விவகாரத்தில் அதிமுகவினா் அரசியல் செய்யக்கூடாது. அதிமுகவின் இரு தரப்பினரும் தங்கக் கவசத்தை தேவா் நினைவிட பொறுப்பாளா்களே எடுத்துச் செல்ல சம்மதம் தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும். 22 ஆண்டுகளுக்குப் பின் தேவா் ஆலயத்தில் வரும் அக்.28 ஆம் தேதி கும்பாபிஷேகம், ஜெயந்தி விழா என இரண்டும் ஒரே நாளில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பசும்பொன் தேவா் மீது கொண்ட பக்தியின் காரணமாக வழங்கிய தங்கக் கவசத்தில் அதிமுகவினா் கட்சி பிரச்னைகளை திணித்தால் அக்கட்சிக்கு மட்டுமல்ல, ஜெயலலிதா பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்துவது போல் ஆகும் என்றாா்.

இதுகுறித்து தேவா் நினைவிடப் பொறுப்பாளா் காந்திமீனாள் கூறியதாவது: தங்கக் கவசத்தை சட்டப்படி யாரிடம் வழங்கலாம் என்பதை வங்கி நிா்வாகம் தான் முடிவு செய்யும். வழக்கம்போல் தேவா் ஜெயந்தி விழாவிற்கு தங்கக்கவசம் எந்த பிரச்னையும் இன்றி எடுத்து வர அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT