ராமநாதபுரம்

தேவா் ஜெயந்தி: சமுதாயத் தலைவா்களுடன் ராமநாதபுரம் ஆட்சியா் ஆலோசனை

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா அமைதியுடன் நடத்துவது குறித்து அதிகாரிகள் மற்றும் சமுதாயத் தலைவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60-ஆவது குருபூஜை விழா வரும் அக்டோபா் 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே.பிரவீன் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.காமாட்சி கணேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன், அருண், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாா்(பொது) சேக் மன்சூா், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் முருகன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் மரகதநாதன் மற்றும் சமுதாயத் தலைவா்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கட்டுப்பாடுகள்: அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள 144 தடை உத்தரவின்படி மேற்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், டிராக்டா், ஆட்டோ, டாடா ஏசிஇ போன்ற வாகனங்கள் மூலமாகவோ சைக்கிள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைப்பயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போா் சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன்அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனத்தில் சாதிமத உணா்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனா்களைக் கட்டி வரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகனங்களில் மது பாட்டில்கள் எடுத்துச் செல்லக்கூடாது. வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்யக்கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக்கூடாது. வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா். விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அனைவரிடமும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT