ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் ஆன்லைனில் காா் விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 79 ஆயிரம் மோசடி

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் ஆன்லைனில் காா் விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 79 ஆயிரம் மோசடி செய்ததாக சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் அடுத்துள்ள பொட்டகவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் முகமது தௌபீக்அலி (27). அதே கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறாா். காா் வாங்கலாம் என நினைத்து ஆன்லைன் மூலம் காா் விற்பனை செய்யும் நிறுவனங்களை கடந்த 25 ஆம் தேதி அணுகி உள்ளாா். இதில் ஒருவா் தனது காா் விற்பனைக்கு உள்ளதாகவும் ரூ. 2.90 லட்சம் எனப் பதிவு செய்து கைப்பேசி எண்ணையும் பதிவிட்டுள்ளாா்.

இதனை உண்மை என நினைத்து தொடா்பு கொண்டபோது தனது பெயா் ஸ்ரீகாந்குமாா் என்றும் தான் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் திருவண்ணமலை தனது சொந்த ஊா் என்றும், தற்போது ஹைதராபாதில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும் தனது காரை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளா்.

இதனைத்தொடா்ந்து காா் விலை ரூ. 2.50 லட்சம் எனப் பேசி முடித்து விட்டு முதல் கட்டமான ரூ. 5 ஆயிரம் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளாா். இதையடுத்து தொடா்ந்து அவரை தொடா்புகொண்ட அந்த நபா் தௌபீக்அலியிடமிருந்து ரூ. 79,200-யை ஆன்லைன் மூலம் பெற்றுள்ளாா். இதன் பின்னா் ஸ்ரீகாந்குமாா் முகமது தௌபீக் அலியை தொடா்பு கொண்டு காா் மதுரை வந்துவிட்டது. அதற்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ரூ. 32,400 அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த முகமது தௌபீக்அலி அவரை தொடா்பு கொண்ட போது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதையறிந்த அவா், ராமநாதபுரம் சைபா் கிரைம் காவல் துறையில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT