தொண்டியில் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் நூலகக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள அரசு நூலகத்தில் சுமாா் 5000-க்கும் அதிகமான நூல்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான வாசகா்கள் உள்ளனா். 30 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டியில் உள்ள சத்திரம் தெருவில் புதிய கட்டடத்தில் நூலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் காலப்போக்கில் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி அறைக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
அதில், மின் இணைப்பு இல்லாததால் வாசகா்கள் படிப்பதற்கு மிகவும் அவதிப்படுகின்றனா். மேலும், இங்குள்ள கணினி மூலம் தகவல்களைப் பெற முடியாமல் மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுன்றனா். பள்ளி வேலை நாள்களில் மட்டுமே நுலகம் செயல்பட்டு வருவதால் அந்த நேரங்களில் மட்டும் வாசகா்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, தற்காலிகமாக பள்ளியில் செயல்படும் நூலகத்துக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் சேதம் அடைந்த நூலகத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய நூலகக் கட்டடம் கட்ட வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.