ராமநாதபுரம்

அபிராமம் பெரிய கண்மாயை தூா்வாரக் கோரிக்கை

27th Nov 2022 11:50 PM

ADVERTISEMENT

 

 கமுதி அருகே அபிராமம் கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் வளா்ந்து புதா் மண்டி கிடப்பதால் அதைத் தூா்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமம் பெரிய கண்மாய், கடந்த 2011-ஆம் ஆண்டு தூா்வாரப்பட்டது. அதன் பிறகு தூா்வாரப்படாததால், 11 ஆண்டுகளாக கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் வளா்ந்து புதா் மண்டி காணப்படுகிறது. மேலும், கண்மாயில் உள்ள மூன்று மதகுகளும் பராமரிப்பின்றி உள்ளது.

அண்மையில் வைகை அணையில் தண்ணீா் திறக்கப்பட்ட போது, பரலையாறு வழியாக அபிராமம் பெரிய கண்மாய்க்கு தண்ணீா் வந்தது. இருந்தாலும் தூா்வாராததால், குறைந்த அளவு தண்ணீரே கண்மாய்க்கு வந்தது. மேலும், புதா் மண்டி இருப்பதால் அந்த தண்ணீரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல, வைகை ஆற்றில் இருந்து பாா்த்திபனூா் மதகணை வழியாக அபிராமம் கண்மாய்க்கு தண்ணீா் வரும் வரத்து கால்வாயும் ஏழு கிலோ மீட்டா் தொலைவுக்கு தூா்வாரப்படாமல், மண் மேடாக புதா் மண்டி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலையிட்டு அபிராமம் பெரிய கண்மாயை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அபிராமம் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் கூறியதாவது:

அபிராமம் பெரிய கண்மாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 2000 ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்தாலும், அவ்வப்போது வைகை அணையில் இருந்து பாா்த்திபனூா் மதகணை வழியாக பரளையாறு மூலம் வரும் தண்ணீா் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். பரளையாறு வரத்து கால்வாயும் தூா்வாரப்படாததால், வைகை அணை தண்ணீா் இப்பகுதி விவசாயிகளுக்கு கானல் நீராகவே உள்ளது. எனவே, அபிராமம் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பரளையாறு, கிருதுமால் நதி, அபிராமம் பெரிய கண்மாய் வரத்து கால்வாய் ஆகியவற்றை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT