திருவாடானையில் ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் சமேத சிநேகவல்லி அம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய நெல்கள் பாதுகாப்பின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளதால் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், விளைச்சலுக்குப் பிறகு கோயிலுக்கு மானியமாக ஏராளமான மூட்டை நெல்களை வழங்கி வருகின்றனா். இதைத் தவிர ஒரு சிலா் காணிக்கையாகவும் நெல் மூட்டைகளை வழங்குகின்றனா். இவ்வாறு வழங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூடைகள் சினேகவல்லி அம்மன் சந்நிதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இவைகள், எலிகள், வண்டுகள், பறவைகளால் சேதம் அடைந்து வீணாகி வருகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் கவலை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஞானசேகரன் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அனுமதி பெற்ற பின் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படும் என்றாா் அவா்.