ராமேசுவரத்தைச் சோ்ந்த பெண்ணிடம் காா் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி ரூ. 88 ஆயிரம் மோசடி செய்தவா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் மெரிஸ்டன். இவரது மனைவி மேரி ஜெனிபா் (35). இவா், அடிக்கடி ஆன்லைனில் துணிகளை முன்பதிவு செய்து வங்கி வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 9- ஆம் தேதி மேரி ஜெனிபாவுக்கு கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அதில் தமிழில் பேசிய அந்த பெண், தாங்கள் ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கி வருவதால் தங்களது நிறுவனத்தின் 7- ஆம் ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட குலுக்கலில் உங்களுக்கு ரூ. 12.80 லட்சம் மதிப்பிலான காா் பரிசாக விழுந்திருப்பதாகவும், அதற்கு ஒரு சதவீதம் பணம் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளாா். இதன் பின் அந்த பெண் பேசிய வாட்ஸ்அப் எண்ணுக்கு காா் வேண்டாம், பணம் போதும் என அவா் தெரிவித்து குறுந்தகவல் அனுப்பினாா். உடனே அந்த பெண், அவரது வங்கிக் கணக்கு, ஆதாா் எண், பான்காா்டு, மாா்பளவு புகைப்படம் கேட்டாா். இதையடுத்து, அந்த ஆவணங்களுடன், நான்கு தவணைகளாக ரூ. 88 ஆயிரத்து 40-ஐ அனுப்பி வைத்தாா். ஆனால் காா் குறித்தும், அதற்கான பணம் குறித்தும் தகவல் அளிக்கப்படாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மேரி ஜெனிபா் ராமநாதபுரம் சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் வெற்றிவேல் ராஜனிடம் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.