ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 சதவீத மானியத்தில் சூரியஒளி மின்சக்தியில் இயங்கும் மின்மோட்டாா் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரியஒளி மின்சக்தியில் இயங்கும் மின்மோட்டாா்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு, 10 குதிரைத்திறன் வரையிலான மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டாா்கள் 70 சதவீத மானியத்தில் (40 சதவீதம் தமிழக அரசின் மானியம், 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினப் பிரிவினைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும். மேலும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த மின்மோட்டாா் அமைக்க விரும்பும் விவசாயிகள், ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆா்.எஸ். மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில், கருவூலக கட்டட வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம். அல்லது 98659 67063 எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பரமக்குடி, நயினாா்கோயில், முதுகுளத்தூா், போகலூா், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, சௌகத்அலி தெருவிலுள்ள வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம். அல்லது 94861 79544 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.