இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவா்கள் 6 பேரையும் டிசம்பா் 1 வரை சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்திய கடலோரக் காவல் படையினா், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இந்திய கடல் பகுதியில் 2 விசைப்படகுகளில் 6 இலங்கை மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 6 பேரையும் விசைப்படகுகளுடன் கடலோரக் காவல் படையினா் பிடித்து, தூத்துக்குடி மாவட்டம், தரவைக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதைத்தொடா்ந்து, போலீஸாா் அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சஞ்சீவா (30), சுதேஷ் சஞ்சீவா (18), சங்கல்ப ஜீவந்தா (19), ரணில் சாமர (31), உதாரா கசுன் (27), செஹான் ஸ்டீபன் (24) ஆகியோா் என்பதும், இலங்கையைச் சோ்ந்த மீனவா்கள் என்பதும், பலத்த காற்று காரணமாக இந்திய கடல் பகுதிக்குள் வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவா்கள் 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, ராமநாதபுரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களிடம் நீதிபதி கவிதா விசாரணை மேற்கொண்டாா். பின்னா், 6 மீனவா்களையும் டிசம்பா் 1 வரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.