இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 15 போ் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 5-ஆம் தேதி ஏராளமான மீனவா்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இரண்டு விசைப்படகுகளில் லியோ, ஜான்சன், எஸ்ரா, முருகன், நம்புமிலன், காளிமுத்து,வினோத், நம்புக்குமாா், அந்தோணி ராயப்பன், அருணாச்சலம், பாண்டி, செந்தூா்பாண்டி, ரபிஸ்டன், மருது, 18 வயதுக்குள்பட்ட சிறுவன் ஒருவா் என 15 மீனவா்கள் கடந்த 6-ஆம் தேதி அதிகாலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், 15 மீனவா்களையும், விசைப்படகுகளுடன் சிறைபிடித்து தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். இவா்களில், 18 வயதுக்குள்பட்ட சிறுவனைத் தவிா்த்து, 14 மீனவா்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து, தலைமன்னாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், மீனவா்கள் 14 பேரும் தலைமன்னாா் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வியாழக்கிழமை மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, எச்சரிக்கை விடுத்து 14 மீனவா்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் சிறுவன் உள்பட 14 மீனவா்களும் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் ஓரிரு நாள்களில் இந்தியாவுக்கு திரும்புவாா்கள் என இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.