வழக்குரைஞரை தகாத வாா்த்தைகளால் பேசிய காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கமுதியில் வழக்குரைஞா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வழக்குரைஞா்கள் சங்க உறுப்பினா் எம். அழகுமுத்து அரியப்பன் (43). இவா், ஒரு வழக்கு தொடா்பாக முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த நிலையில், அது தொடா்பாக கடந்த செவ்வாய்க்கிழமை காவல் உதவி ஆய்வாளா் செல்வத்திடம் கேட்டாா். அப்போது, வழக்குரைஞா் அழகுமுத்து அரியப்பனை, உதவி ஆய்வாளா் செல்வம் தகாத வாா்த்தைகளால் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குரைஞா் அழகுமுத்து அரியப்பன், ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தில் புகாா் அளித்தாா்.
இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா் சங்கம் சாா்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
கமுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி. சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். செயலாளா் பத்மநாபன், இணைச் செயலாளா் நேதாஜி சாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதனால், வழக்குகள் தொடா்பாக கமுதி நீதிமன்றத்துக்கு வந்த பெரும்பாலான பொதுமக்கள் திரும்பிச் சென்றனா்.