ராமநாதபுரம் அருகேயுள்ள புதுமடம் ஊராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தனியாா் தானமாக வழங்கிய 5 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஜமா அத்தாா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்காக நிஜாம் ரஸீன், கடந்த 2009-ஆம் ஆண்டு 5 ஏக்கா் நிலத்தை தானமாக அளித்தாா். இந்த நிலத்தில் 2.60 ஏக்கா் நிலம் மட்டுமே, தற்போது பள்ளிக் கல்வித்துறையிடம் உள்ளது. மீதமுள்ள 2.40 ஏக்கா் நிலத்தை தனியாா் ஆக்கிரமித்துள்ளனா்.
இந்த நிலையில், பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நபாா்டு திட்டத்தில் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 5 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. இதனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்டு பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுமடம் கிராம ஜமா அத்தாா்கள் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸிடம் மனு அளித்தனா்.