ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்

8th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள், அவா்களது படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 400-க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள், 350-க்கும் மேற்பட்ட சிறிய விசைப்படகுகள் மூலமும் மீனவா்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவ்வாறு மீன்பிடிப்புக்காக கடலுக்குச் செல்லும் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்வதும், தாக்குதல் நடத்துவதும் தொடா்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவா்கள், 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துச் சென்றனா்.

ADVERTISEMENT

இதில், ஒரு மீனவா் 18 வயதுக்குள்பட்ட சிறுவா் என்பதால் அவா் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யவில்லை. மீதமுள்ள 14 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலைமன்னாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நவம்பா் 17-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வவுனியா சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்கள், அவா்களது படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

இதனால் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காத சிறிய விசைப்படகு மீனவ சங்கத்தினா் மீன்வளத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT