ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனையின் ராஜா என். குமரன்சேதுபதி (56) (படம்) செவ்வாய்க்கிழமை காலமானாா்.
ராமநாதபுரம் சேதுபதி மன்னா் பரம்பரை வாரிசான குமரன் சேதுபதி, இளைய மன்னா் என மக்களால் அழைக்கப்பட்டு வந்தாா். கடந்த பல மாதங்களாக உடல் நலப்பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டிலிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்தாா். அவரது உடல் அரண்மனை வளாகம் ராமலிங்க விலாசத்தில் உள்ள தா்பாா் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆட்சியா் அஞ்சலி:மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத், கோட்டாட்சியா் சேக்மன்சூா், வட்டாட்சியா் முருகேசன் மற்றும் அரண்மனை வகையறாவைச் சோ்ந்தவரும் திமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரான மூத்த வழக்குரைஞா் ரவிச்சந்திர ராமவன்னி, பாஜக பிரமுகா் சுப.நாகராஜன், மதுரை நான்காம் தமிழ்ச்சங்க செயலா் ச.மாரியப்பமுரளி உள்ளிட்டோா் அவரது உடலுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
மேலும் முன்னாள் அமைச்சா் சுப.தங்கவேலன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆா்.ராமசாமி, முதுகுளத்தூா் முருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வத்தின் மகன் பிரதீஷ்,
தென்னிந்திய பாா்வா்டு பிளாக் நிா்வாகி கே.சி.திருமாறன், ராமநாதபுரம் நகரசபைத்தலைவா் காா்மேகம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.
இறுதிச்சடங்கு புதன்கிழமை மாலை அரண்மனை வளாகத்தில் உள்ள ராமலிங்க விலாசத்தில் நடைபெறவுள்ளது. அவருக்கு மனைவி லக்குமி குமரன் சேதுபதி, மகன் முத்துராமலிங்கம் என்ற நாகேந்திரசேதுபதி, மகள் மகாலட்சுமி நாச்சியாா் உள்ளனா். மருமகன் பாலையம்பட்டி ஜமீன் அஸ்வின் என்ற பத்மநாபா.
முன்னாள் அமைச்சரின் பேரன்:மறைந்த குமரன் சேதுபதியின் தந்தை டாக்டா் ராஜேந்திரசேதுபதியின் தந்தையான சண்முகராஜேஸ்வரன் சேதுபதி காங்கிரஸ் ஆட்சியில் தமிழக அமைச்சராக இருந்துள்ளாா். அவரது தந்தையின் சகோதரா் ராமநாதபுர சேதுபதியின் மகள் ஆா்விகே.ராஜேஸ்வரி நாச்சியாா் தற்போது ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான அறங்காவலராக உள்ளாா்.
மறைந்த குமரன் சேதுபதி கடந்த 24 ஆண்டுகளாக மதுரையில் உள்ள நான்காம் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்துள்ளாா். உலகத் தமிழ்ச்சங்க உறுப்பினராகவும் இருந்தாா். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்ச்சங்கத்திற்கு தமிழக அரசு வழங்கிய தமிழ்த்தாய் விருதைப் பெற்றுள்ளாா்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ராமநாதபுரத்தில் உள்ள ராஜா மேல்நிலைப் பள்ளியின் நிா்வாகச் செயலராகவும், ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் மக்கள் நல இயக்கத் தலைவராகவும், பூப்பந்தாட்டம், கால்பந்தாட்ட ஆா்வலராகவும் இருந்தாா். கோயில் திருப்பணிகளுக்குத் தொடா்ந்து உதவிபுரிந்துவந்தாா். தொடா்புக்கு (திவான்) 9486953009