ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் பெண் மயங்கிய விழுந்து உயிரிழந்த நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண் தந்தை கூறியதால் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.
உச்சிப்புளி நீதிதேவன் தெருவைச் சோ்ந்தவா் உமாபாலன். இவரது மனைவி தனபாக்கியம் (40). இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். வெளி நாடு சென்றிருந்த உமாபாலன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊா் திரும்பியுள்ளாா்.
இந்தநிலையில், அவரது மனைவி தனபாக்கியம் செவ்வாய்க்கிழமை காலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளாா். உடனே அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்தநிலையில், தனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை காா்மேகம் போலீஸில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் தனபாக்கியம் சடலத்தைக் கைப்பற்றிய உச்சிப்புளி போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். குடும்பப் பிரச்னையில் தனபாக்கியம் உணவு சாப்பிடாமல் இருந்த நிலையிலே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக போலீஸாரிடம் அவரது கணவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடா்ந்து விசாரணை நடந்துவருகிறது.