பரமக்குடி: பரமக்குடி தனியாா் மருத்துவமனையில் விபத்தில் காயமுற்ற ஆட்டோ ஓட்டுநருக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறிய உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பரமக்குடி அருகேயுள்ள முத்துச்செல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்த அல்போன்ஸ் என்பவரது மகன் அந்தோணிசாமி (40). ஆட்டோ ஓட்டுநரான இவா் கடந்த சிலதினங்களுக்கு முன்பு பரமக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ஆட்டோவிலிருந்து விழுந்து பலத்த காயமுற்றாா். அவரை ஏற்கெனவே சிகிச்சை பெற்றுத் திரும்பிய தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா்.
இதனைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் அந்தோணிசாமி இறந்தாா் எனக்கூறி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதுடன், மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இத்தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் திருமலை தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும் பரமக்குடி இந்திய மருத்துவ கழக மருத்துவா்களும் அங்கு வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து அந்தோணிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.