ராமேசுவரம் மீனவா்கள் 5 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த போராட்டம் சனிக்கிழமையும் தொடருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகேயுள்ள
தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவா் கூட்டமைப்பு சாா்பில் மீனவா்களுக்கு டீசலை உற்பத்தி விலையில் வழங்க வேண்டும். தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மீனவா்களுக்கான மானிய விலை டீசலை 1,800 லிட்டராக உயா்த்தி வழங்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட படகுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் படகு உரிமயாளா்களுக்கும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ராமேசுவரத்தில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும். மீனவா் சங்கப் பிரதிநிதி ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி அளிக்க தமிழக கட்சிகள் முன்வர வேண்டும் ஆகிய 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்து விசைப்படகு மீனவா் சங்கத் தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தாா். சமுதாயத் தலைவா் சம்சன் முன்னிலை வகித்தாா். மீனவா் சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், தாஜூதீன், தயாளன், காா்த்திக், ரூஸ்மாண்ட் மற்றும் தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மாவட்டத்தை சோ்ந்த மீனவா் சங்கத் தலைவா்கள் கலந்து கொண்டனா். சனிக்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என மீனவா் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.