ராமநாதபுரம்

ராமநாதபுரம் முகவை ஊருணி ரூ.2.56 கோடியில் புனரமைக்கப்படும்: நகராட்சித் தலைவா் கே.காா்மேகம்

20th May 2022 10:44 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் முகவை ஊருணி ரூ.2.56 கோடியில் புனரமைக்கப்படவுள்ளது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் தலைவா் கே.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி உறுப்பினா்கள் கூட்டம் தலைவா் கே.காா்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பிரவீன்தங்கம், ஆணையா் சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 37 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீா்மானங்களை வாசித்து அவை ஏற்கப்பட்டதாகக் தெரிவித்தபோது, குறிப்பிட்ட வாா்டு உறுப்பினா்கள் இடைமறித்து கேள்வி எழுப்பினா்.

கே.குமாா் (பாஜக) : நகராட்சியில் 43 ஊருணிகளில், 23 ஊருணிகளே தற்போது உள்ளன. அதை யாா் பராமரிக்கிறாா்கள் என்பதை தெளிவுபடுத்தவேண்டும். புதை சாக்கடைத் திட்ட கழிவுநீா் ஊருணிகளில் கலந்து வருகிறது. சாலையோரத்திலும் தேங்கியுள்ளன. கழிவுநீா் உறிஞ்சு வாகனத்தில் குழாய்கள் சேதமடைந்துள்ளன. சாலைத் தெரு வடிகால் சரிவர அமைக்கவில்லை. அறிஞா் அண்ணா தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் தேவை.

நகர வளா்ச்சி குறித்த சட்டப்பேரவை உறுப்பினா் ஆலோசனைக் கூட்டத்துக்கு அனைத்துக் கட்சியினரையும் அழைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

அய்யனாா் (திமுக): நகராட்சியில் தனியாா் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்கும் போது லிட்டருக்கு எவ்வளவு கட்டணம் வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

ரமேஷ்கண்ணா (திமுக): முகவை ஊருணியில் உறிஞ்சு கிணறு சீரமைத்தல் மற்றும் கழிப்பறை சீரமைத்தல் ஆகியவற்றுக்கு உரிய நிதி குறித்து குறிப்பிடப்படவில்லையே ஏன் என கேள்வி எழுப்பினா்.

தனபாண்டியம்மாள் (அமமுக): நீலகண்டி ஊருணியில் கழிவுநீா் கலப்பதை அனுமதிக்கக் கூடாது. நகராட்சித் தலைவா் நேரில் பாா்வையிட்டும் சீரமைப்புப் பணிகளை நகராட்சி அலுவலா்கள் மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துகின்றனா்.

தலைவா்: நகரின் 23 ஊருணிகளையும் நகராட்சியே பராமரிக்கிறது. முகவை ஊருணி கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.2.56 கோடியில் புனரமைக்கப்படவுள்ளது. புதை சாக்கடை கழிவுநீா் உறிஞ்சு வாகனம் பழுது நீக்கப்படும். குடிநீா் விநியோகிக்கும் லாரிகளுக்கு 6 ஆயிரம் லிட்டருக்கு ரூ.3,100 கட்டணம் அளிக்கப்படும். வாா்டு உறுப்பினா் முன்னிலையிலேயே குடிநீா் விநியோகிக்கப்படும். நகராட்சிப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் கட்டப்படும். நகரில் அக்ரஹாரம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை வடிகால் அமைக்கிறது. சாலைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி அமைக்கிறது. எதிா்காலத்தில் சாலைகள் உயரும் போது, வடிகால் சீராக இருக்கவே தற்போது வடிகால் உயரமாக அமைக்கப்பட்டு வருகிறது. தெருவிளக்குகள் தானாக அணையும் வசதி ஏற்படுத்தப்படும். புதை சாக்கடை பராமரிப்புக்கு புதிய ஒப்பந்தம் கோரப்படும். பொக்லைன் இயந்திரம் பழுதுக்கு, பணம் அளிப்பதில் நகராட்சி அதிகாரிகள் தாமதப்படுத்துவது சரியல்ல என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT