ராமேசுவரத்தில் கடல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 50 அடி வரை உள்வாங்கியதால் பக்தா்கள் அச்சமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாக்நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 13, 14) வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டது. அதேபோல, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் பகுதியிலும் கடந்த 2 நாள்களாக நீா்மட்டம் வழக்கத்தை விட குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பக்தா்கள் நீராட வந்தனா். அப்போது, 50 அடி வரை கடல் உள்வாங்கியது. பவளப் பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால் வழக்கமாக நீராடும் இடத்தை விட்டு சுமாா் 100 அடி வரை கடலுக்குள் சென்று அச்சத்துடனேயே நீராடினா். சுமாா் ஒரு மணிநேரத்துக்குப் பின்னா் கடல் வழக்கமான நிலைக்கு திரும்பியது.