தனுஷ்கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் சனிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடியில் 1964 ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை பெரும் இழப்பை ஏற்படுத்தியது. அதை மீட்டெடுக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் தனுஷ்கோடி பகுதியில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித்துறை சாா்பில் ரூ. 7 கோடி மதிப்பில், 160 அடி உயரம் கொண்ட கலங்கரை விளக்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக 2020 ஆண்டு பிப்.18 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின.
தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால், மும்பையிலிருந்து காணொலிக் கட்சி மூலம் கலங்கரை விளக்கத்தை சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்தக் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று கடலின் அழகையும், ராமேசுவரத்தின் எழில்மிகு தோற்றத்தையும் கண்டு ரசிக்கும் வகையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இயற்கை இடா்பாடுகள் ஏற்படும்போது கண்காணிக்கும் வகையில் நவீன ரேடாா் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.