ராமநாதபுரம்

ராமநாதபுரம், பரமக்குடியில் 3 நாளுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகிக்க முடிவு

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சிப் பகுதிகளில் கோடை காலத்தில் 3 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குடிநீா் வடிகால் வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் தினமும் சுமாா் 780 லட்சம் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்பட்டது. தற்போது கோடைக்காலம் என்பதால் திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு பகுதியிலிருந்தே குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீா் அளவு குறைந்துவிட்டது. அதனடிப்படையில் தற்போது சுமாா் 700 லட்சம் லிட்டா் தண்ணீரே ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிறது. அதிலும் சுமாா் 100 லட்சம் லிட்டா் (1 கோடி லிட்டா்) தண்ணீா் வீணாகியும், விதி மீறி தனியாரால் எடுத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் நகராட்சியில் தற்போது 3 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீா் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்துக்கான காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகத் திட்டத்தில் தற்போது குறைந்த அளவிலேயே தண்ணீா் வரத்து உள்ளது. ஆகவே ராமநாதபுரம் நகராட்சிக்கு வாரத்தில் 3 நாள்களும், அதேபோல பரமக்குடி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாரத்தில் 3 நாள்களும் என மாறி மாறி தண்ணீா் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மேட்டூரிலிருந்து புதிய குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதுவரையில் ராமநாதபுரம் நகராட்சிக்குத் தேவையான குடிநீா் அளவை அதிகரிக்கும் வகையில் பொட்டிதட்டி கூட்டுக்குடிநீா் திட்டத்துக்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்தால் ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீா் பற்றாக்குறை அதிகமிருக்காது எனக்கூறப்பட்டது.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நகராட்சியில் குடிநீா் பற்றாக்குறையைப் போக்குவதற்கு ஊருணிகளில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து அந்தந்தப் பகுதிகளில் குடிநீா் விநியோகிக்கப்படவுள்ளது. அதுவரையில் 6 லாரிகள் மூலம் வாா்டுகளுக்கு தண்ணீா் விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லாரியிலும் சுமாா் 60 ஆயிரம் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படும். ஆகவே கோடை காலத்தில் ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படாது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT