பரமக்குடி- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணி எல்.கருங்குளம் பகுதியில் உள்ள பள்ளி, வீடுகளை பாதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மதுரையிலிருந்து - ராமநாதபுரம் இடையே பரமக்குடி வரையில் தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரையிலான நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் சில மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டதால் தாமதமானது.
இந்நிலையில் தற்போது பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையில் உள்ள இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் லாந்தை ஊராட்சியில் உள்ள எல்.கருங்குளம் கிராமத்தில் சாலையின் ஒரு பக்கம் மட்டும் நிலம் கையகப்படுத்தப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
தனியாா் கல்வி நிறுவனத்துக்கு ஆதரவான நிலையில், எல். கருங்குளத்தில் சாலையின் ஒரு பக்கம் மட்டும் நிலம் கையகப்படுத்தப்படுவதால் ஏராளமான வீடுகளும், தொடக்கப் பள்ளிக்கூடமும் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினா் கூறுகின்றனா்.
ஆகவே சாலையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி வீடுகள், பள்ளிக்கூடம் இடிக்கப்படுவதை தவிா்க்கவேண்டும் என கூறி லாந்தை ஊராட்சி தலைவா் கவிதா ராமகிருஷ்ணன் மற்றும் கிராமச் செயலா் மு.சங்கா், கவுன்சிலா் சத்தியேந்திரன் உள்ளிட்ட ஏராளமான பெண்களும் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.